அமெரிக்காவைவிட்டு வெளியேறும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 4:16 pm

அமெரிக்காவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் புதிய தொழில் தொடங்கத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 12 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார் ட்ரம்ப்.

இதில் ஃபோர்ட் மோட்டார் நிறுவனம், டெல் கணணி நிறுவனம், மின்பொருள் நிறுவனமான டெஸ்லா, வேர்ல்பூல், ஜான்சன் அன்ட் ஜான்சன், விமான நிறுவனங்களான லாக்ஹீட், ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்ட 12 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

துணை அதிபர் மைக் பென்ஸூம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் பிரதிநிதி இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

நிறுவனத் தலைவர்களுடனான இந்த சந்திப்பில் ட்ரம்ப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

[quote]அமெரிக்க நிறுவனங்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் 75 சதவீதம் வரை விலக்கு அளிக்க எனது அரசு தயாராக இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும். விரைவாகவும் எளிதாகவும் தொழில் தொடங்கலாம். பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. இங்குள்ள நிறுவனங்களுக்குப் புதிய வரிச்சுமை இருக்காது. தற்போதுள்ள வரிகளிலும் ஏராளமான சலுகைகள் அளிக்கப்படும். அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே பல நிறுவனங்கள் அமெரிக்காவிற்குத் திரும்புவதாக அறிவித்துள்ளன. தாய்நாட்டுக்குத் திரும்பும் நிறுவனங்களின் பெரும் அலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அதேவேளையில், வெளிநாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்க நினைக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவில் செயற்படும் நிறுவனங்களை ஏதோ காரணம் கூறி மூடிவிட்டு, வெளிநாடுகளில் அதே நிறுவனத்தை அமைத்து, அங்கு பொருட்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யலாம் என்று யாரும் எண்ணம் கொள்ள வேண்டாம். அமெரிக்க எல்லைக்குள் அந்தப் பொருட்கள் நுழைய வேண்டுமானால், கடுமையான வரி விதிப்பை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.[/quote]

என ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மெக்சிக்கோ, கனடா போன்ற நாடுகளில் செயற்பட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களால் அந்நாடுகள் பொருளாதார ரீதியாகப் பயனடைந்து வருகின்றன. ஆனால், அந்த உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்து அமெரிக்க நிறுவனங்கள் தாய்நாடு திரும்பச் செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்