ரவிராஜ் படுகொலை: மேன்முறையீட்டு மனுவின் மீள் பரிசீலனை குறித்து அறிவிக்கப்படவுள்ளது

ரவிராஜ் படுகொலை: மேன்முறையீட்டு மனுவின் மீள் பரிசீலனை குறித்து அறிவிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 7:54 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேன்முறையீட்டு மனுவின் மீள் பரிசீலனை குறித்து மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ரவிராஜின் படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ரவிராஜின் மனைவியால் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், குறித்த மனு கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், அன்றைய தினம் மனுதாரரோ அவர் தரப்பு சட்டத்தரணியோ மன்றில் ஆஜராகாமையால் மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு, மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனால் இன்று நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டதை ஆட்சேபித்து ரவிராஜின் மனைவி கடந்த 10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, ரவிராஜ் படுகொலை வழகின் தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபரால் பிறிதொரு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்