தடை நீக்கத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் சல்லிக்கட்டு நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

தடை நீக்கத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் சல்லிக்கட்டு நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

தடை நீக்கத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் சல்லிக்கட்டு நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 6:16 pm

சல்லிக்கட்டு தொடர்பிலான மத்திய அரசின் இரண்டு அறிக்கைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

வாபஸ் தொடர்பிலான மனு நாளை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன், Peta வை தடை செய்ய வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடைபெறாமைக்கு Peta வே காரணம் என்றும் எனவே அதனை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்ற மனுவை உடனடி வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதரப்பில் கோரப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமி மீதும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

சல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் கூட்டு இயக்கத்தின் சார்பாக 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

சல்லிக்கட்டு மீதான தடை நீக்கத்தின் பின்னர் தமிழகம் முழுவதிலும் சல்லிக்கட்டு நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 29 ஆம் திகதி திருச்சி – மணப்பாறை, கருங்குளம் பகுதியில் சல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலங்கா நல்லூரில் பெப்ரவரி முதலாம் திகதியும் பாலமேட்டில் பெப்ரவரி 2 ஆம் திகதியும் சல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

இதேவேளை, சல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், அமைதியின்மையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 140 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இடம்பெற்றதாகவும் இதில் 108 மாநகரப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 55 பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 97 பொலிஸார் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட 63 பொதுமக்களும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்து மெரினாவில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், மெரினா கடற்கரையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் கடற்கரைப் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மதுரை மாவட்டம் செல்லூரில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய இளைஞர்கள் கடந்த 19 ஆம் திகதி வைகை ஆற்று மேம்பாலத்தில் சென்ற ரயிலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

ரயிலை மீட்க பொலிஸார் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்