இலங்கை அரச விமானம் மீது 1999 இல் தாக்குதல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இலங்கை அரச விமானம் மீது 1999 இல் தாக்குதல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 5:47 pm

யாழ்ப்பாணம் – கொம்படி பகுதியில் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நான்கு பேர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பிரதிவாதியால் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்த முடியாது என அறிவித்து கடந்த 17 ஆம் திகதி குறித்த சாட்சியத்தை நீதிபதி நிராகரித்தார்.

இதனை அடுத்து மேலதிக சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து எவ்வித தகவலும் கிடைக்காமையால் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். கொம்படி பகுதியில் 1999 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விமானத் தாக்குதலில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கொமான்டர் ஒருவரும் விமானப்படை வீரர்கள் மூன்று பேரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நவாலி வடக்கு – மானிப்பாயை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அதே வருடம் ஜூன் மாதம் 16 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி குறித்த நபரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

வாக்குமூலத்தின் பிரகாரம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, பிரதிவாதிக்கு எதிரான பிறிதொரு வழக்கு மன்னார் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்