அரச, தனியார் நிறுவனங்களிலும் ​டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அரச, தனியார் நிறுவனங்களிலும் ​டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அரச, தனியார் நிறுவனங்களிலும் ​டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 8:57 am

டெங்கு ஒழிப்புக்காக அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் துப்புரவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சு மட்டத்திலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை, சகல நிறுவனங்களையும் சோதனையிடும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் சுமார் 3500 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் வைத்திய நிபுணர் ஹசித்த திசேரா குறிப்பிட்டார்.

எதிர்வரும் சில மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவக்கூடிய தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 3000 பேர் வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் பதிவாகியதாகவும் வைத்திய நிபுணர் ஹசித்த திசேரா தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், காலி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்