ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைதி ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக வலுவடைந்துள்ளன

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைதி ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக வலுவடைந்துள்ளன

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைதி ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக வலுவடைந்துள்ளன

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 1:10 pm

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் சென்னை மெரினா கடற்கரையில்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார்.

இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரைக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

எனினும், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், போராட்டத்தை மார்ச் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க வேண்டும் என காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி நேற்று இரவு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்குப் பின்னரும் போராட்டத்தைக் கைவிடாத நிலையில் இன்று காலை மெரினாவில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்போது போராட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்த போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மெரினா கடற்கரையிலிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதன்போது ஆரப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

மேலும் அலங்காநல்லூரில் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை கலைக்க முற்பட்ட போது பொலிஸார் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தடியடி மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பொலிஸ் நிலையத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்களுக்கும் தீ மூட்டப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் சென்னையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அண்ணா சாலை, காமராஜர் சாலை மற்றும் நடேசன் சாலை உள்ளிட்ட வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்