ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 6:37 pm

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நிர்ந்தர தீர்வு கோரி தன்னெழுச்சியாக ஒருவாரமாக நடைபெற்று வந்த போராட்டம், அமைதியின்மைக்கு மத்தியில் இன்று முடிவுக்கு வந்தது.

இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற தமிழக – சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி, சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டுவந்த போராட்டம் இன்றும் தொடர்ந்தது.

இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரைக்கு சென்ற பொலிஸார், இளைஞர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.

எனினும், கறுப்புக்கொடிகளை காட்டி அங்கிருந்து வெளியேற மறுத்த இளைஞர்களை வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து, இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவர்களுடன் மீனவர்களும் இணைந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

சென்னையில் மெரீனாவிற்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்ட நிலையில், பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது பொலிஸார் தடியடி மேற்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை கடற்கரையில் நுழைய முயன்றவர்கள் மீது பொலிஸார், கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐஸ்ஹவுஸ் பொலிஸ் நிலையத்திற்கு அடையாளந் தெரியாதோர் தீ வைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகின.

அத்துடன், பொலிஸ் நிலையத்திற்குள் சிக்கியிருந்த பொலிஸார் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இளைஞர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் ஜல்லிக்கட்டுக்கு அறவழியில் நடந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதால் அனைவரும் கலைந்து செல்லுமாறு போராட்டக் குழுவை சேர்ந்த இரு இளைஞர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

மெரீனா போராட்டக்காரர்கள் இரண்டு மாதங்கள் காத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக த ஹிந்து, செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மதுரை அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் முயற்சித்த சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸார் தடியடி மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், கற்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் போராட்டம் இடம்பெற்ற மைதானத்திற்கு பொலிஸார் சென்ற சந்தர்ப்பத்தில், மாணவர்கள் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டதாக பிபிசி செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தை கையாள்வதற்கு தமிழக அரசு தவறியுள்ளதாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து, தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், சென்னை மெரீனாவிற்கு இன்று மாலை சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மாணவர்களிடம் விளக்கமளித்தார்.

தமிழக மாணவர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக, அரச தலைமை சட்டத்தரணி முத்துக்குமாரசாமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, எப்போது வரை போராட்டம் நடைபெறும் எனவும் கேள்வியெழுப்பியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது எனவும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை, மதுரை அலங்காநல்லூரில் பெப்ரவரி முதலாம் திகதி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்