ஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது: ஜனாதிபதி

ஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 7:26 pm

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.

இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

[quote]அரிசி, பருப்பு, சீனி, உப்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றின் வருடாந்த தேவையை நாம் அறிவோம். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. குழுவின் அறிக்கையோ பரிந்துரையோ இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதால் சந்தையில் உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது பாரிய பிரச்சினையாகும். எந்தவொரு விடயத்திலும் குறைபாடுகள் இருக்க முடியாது. தேவை ஏற்படின் உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யுங்கள். எந்தவொரு அரிசியையும் 76 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்ய முடியாது. அரசாங்கம் இறக்குமதி செய்து நட்டத்திற்கேனும் வழங்கும். நிதி அமைச்சிற்கு இது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அமைச்சில் தேவையான நிதியை வைத்துக் கொள்ளுங்கள். நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு அனைத்து அதிகாரங்களுமுள்ளன. நெல் ஆலைகளை தனையிடுங்கள். அங்குள்ள நெல்லின் அளவை சோதனையிட்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.[/quote]

என ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, தனியார் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் மின்குமிழ்களை நிறுத்தி, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தனியார் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்காலத்தில் வறட்சியினால் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்