விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்

விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்

விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2017 | 5:49 pm

விமானப் பயணங்கள் இனிமையானவை என்றாலும் மிகக் கோரமான விபத்துக்கள் விமானப் பயணங்கள் மீதான அச்சத்தை உண்டாக்குகின்றன.

இருப்பினும், தற்போது விற்பனையில் உள்ள சில விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

என்றாலும், எல்லாவற்றையும் மீறி வானிலை, மனிதத் தவறுகள் காரணமாக விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

இதேவேளை, அனைத்து வித சூழல்களிலும் சில விமான வடிவமைப்புகள் விபத்தில்லா அல்லது மிக மிகக் குறைவான விபத்துக்களில் சிக்கிய புள்ளிவிபரங்களுடன் உலகின் பாதுகாப்பான விமான வடிவமைப்புகளாக அறியப்படுகின்றன.

அவையாவன…

01. எயார்பஸ் A340

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான வடிவமைப்பாக எயார்பஸ் A340 விமானம் கருதப்படுகிறது. இந்த விமானம் ஒரு விபத்தில் கூட சிக்கியதில்லை என்பது தான் இந்த பெருமைக்கு காரணம். இது A340 – 200, 300, 500 மற்றும் 600 ஆகிய மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. 261 முதல் 326 பேர் வரை பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதன்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்ட இந்த விமானம், 1993 இல் பயணிகள் சேவைக்கு வந்தது. லூஃப்தான்ஸா, சைபீரியா, தென்னாபிரிக்கா எயார்லைன்ஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இந்த வகை விமானம் இருக்கிறது.

இது 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானம். இந்த விமானம் மணிக்கு 871 கிமீ வேகம் வரை பறக்கவல்லது. முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,400 கிமீ தூரம் வரை பறக்கும். 1993 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 377 எயார்பஸ் A 340 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

1

02. போயிங் 777

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான வடிவமைப்புகளில் இரண்டாவது சிறந்த மாடல் என்ற பெருமையை போயிங் 777 விமானம் பெறுகிறது. 18 மில்லியன் மணிநேர பயணத்தில் ஒரு விபத்தில் மட்டும் சிக்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதன்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. எமிரேட்ஸ், யுனைடேட் எயார்லைன்ஸ், கத்தே பசிஃபிக் மற்றும் எயார் பிரான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,460 போயிங் 777 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 396 பயணிகள் வரை செல்லும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 892 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக 13,650 கிமீ தூரம் வரை பறக்கும்.

2

03. போயிங் 747

உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த வகை விமானங்களையே பயன்படுத்துகின்றனர். இந்த விமானத்தின் விபத்து புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது 17 மில்லியன் மணிநேர பயணத்திற்கு ஒரு விபத்தில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1969 ஆம் ஆண்டு இந்த விமானம் முதன்முறையாக பறக்கவிட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் எயார்வேஸ், கொரியன் எயார், லூஃப்தான்ஸா, சைனா எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,568 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானமானது அதிகபட்சமாக 939 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,320 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்லும்.

3

04. போயிங் 737

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த விமானமும் விபத்தில்லா சேவையில் மிகச் சிறந்ததாக இருக்கின்றது. 16 மில்லியன் மணிநேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

1997 இல் முதன்முறையாக சோதனையோட்டம் நடத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு சேவைக்கு வந்தது. சவுத்வெஸ்ட் எயார்லைன்ஸ், ரையன்எயார், யுனைட்டட் எயார்லைன்ஸ், லயன் எயார் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6,203 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருக்கை வசதியை பொறுத்து 149 முதல் 220 பேர் வரை செல்லும் மாடல்களில் கிடைக்கிறது. இந்த விமானத்தில் 2 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 844 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 5,460 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

4

05. போயிங் 767

இந்த விமானமும் மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த விமானம் 15 மில்லியன் நேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து வாய்ப்பு இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றது.

1981 ஆம் ஆண்டு முதன்முறையாக சோதனையோட்டம் நடத்தப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்தது. இதுவரை 1,096 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். முழுவதுமாக எரிபொருள் நிரப்புகையில், 12,200 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

5


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்