வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க ஐ.நா முன்வந்துள்ளது

வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க ஐ.நா முன்வந்துள்ளது

வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க ஐ.நா முன்வந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2017 | 1:14 pm

நாட்டில் நிலவும் வரட்சிக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலணிக்கு இந்த நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ.நா அபிவிருத்தித் திட்ட வதிவிட பிரதிநிதி, உலக உணவுத் திட்ட பிரதிநிதியும் இலங்கைக்கான பணிப்பாளருமான பிரண்டா பார்ட்டன் மற்றும் ஐ.நா உலக உணவுத் திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏர்தரின் கசின் ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது வரட்சி நிவாரணம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக, வரட்சி தொடர்பான தொடர்பாடல், மதீப்பீடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கான நிபுணர்களை வழங்கமுடியும் எனவும் ஐ.நா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வரட்சி காரணமாக தொழில்களை இழந்த கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது நிறுவனத்தினால் வழங்க முடியும் என இந்த கலந்துரையாடலின் போது உலக உணவுத் திட்ட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா பிரதிநிதிகள், குடிநீர் இன்று நீண்ட கால சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய வரட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் பவுசர்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலை குறித்து கரிசனை செலுத்திவரும் ஐ.நா அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிலைமைகளை மேலும் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் நடைபெறும் செயலணியின் கூட்டங்களுக்கு சமூகமளிக்குமாறு அவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்