ஓமந்தை இராணுவ முகாமில் இருந்து படையினர் வெளியேற்றம்

ஓமந்தை இராணுவ முகாமில் இருந்து படையினர் வெளியேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2017 | 4:22 pm

வவுனியா – ஓமந்தை இராணுவ முகாமில் இருந்து படையினர் வெளியேறி வருகின்றனர்.

தனியாருக்கு சொந்தமான காணியை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக படையினர் வெளியேறி வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, தற்போது முகாம்கள் அகற்றப்பட்டு வருவதோடு, முகாம்களில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் பொருட்களும் அப்புறப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

விரைவில் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

எனினும், ஓமந்தை சோதனைச்சாவடி காணப்பட்ட பகுதிகளிலிருந்து முகாம்களை அகற்றுவதற்கு முன்னர் இராணுவத்தினர் தங்குவதற்கான மாற்றிடத்தைக் கோரியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஷ்பகுமார குறிப்பிட்டார்.

அதற்கமைய, புளியங்குளத்தில் இராணுவத்தினருக்கான மாற்றுக்காணியை வழங்க கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியை வழங்கக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயுமாறும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஓமந்தை பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

யுத்தகாலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்குமான பிரதான நுழைவாயிலாகவும், சோதனைச்சாவடியாகவும் ஓமந்தை பகுதி காணப்பட்டது.

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஓமந்தை சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்பட்ட போதிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் அங்கு நிலைகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு கோரி பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் தற்போது ஓமந்தை சோதனைச்சாவடி காணப்பட்ட பகுதி விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்