ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம்

ஹொரனையில் அடிக்கல் நாட்டப்பட்ட டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பில் சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 8:09 pm

குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படும் வாகனங்களைப் பொருத்தும் தொழிற்சாலையுடன் வொக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லையென ஏற்கனவே தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ், பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஹொரணை டயர் உற்பத்தி தொழிற்சாலையின் முதலீடு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

முதலீட்டு சபையின் கீழ், இலங்கையிலுள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்காக இத்தாலியின் மரங்கொனி என்ற நிறுவனம் இலங்கை நாணயப் பெறுமதியில் 11 பில்லியன் டொலர்களை மறைமுகமாகவே முதலீடு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெறுமதியில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களையே மரங்கொனி என்ற நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும், இதற்காக முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான நந்தன லொக்குவிதாணவே முதலீடு செய்துள்ளதாகவும் சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹொரண, வகவத்த பகுதியில் இலங்கையின் பாரிய டயர் உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் கடந்த வியாழக்கிழமை பிரதமரால் நாட்டி வைக்கப்பட்டது.

இதன் ஊடாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 3000 தொழில் வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கொனி நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான எந்தவொரு கூட்டு தொழில் முயற்சியையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்றும், இதற்காக முதலீட்டு சபையுடன் எவ்வித உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் செய்தி மூலாதாரம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சண்டே டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில்நுட்ப அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயற்பாட்டை மாத்திரமே இத்தாலியின் மரங்கொனி நிறுவனம் முன்னெடுத்து வருவதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக மரங்கொனி நிறுவனம் டயர் உற்பத்தியுடன் நேரடியாக தொடர்புபடவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக மரங்கொனி நிறுவனம் கூறியுள்ளது.

மரங்கொனி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 2014 ஆம் ஆண்டிலேயே வாகன டயர் உற்பத்தியிலிருந்து அந்த நிறுவனம் விலகிச் சென்றுள்ளது.

சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரமும், மரங்கொனி நிறுவனத்தின் தெளிவுபடுத்தலின் படியும் 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த டயர் உற்பத்தி தொழிற்சாலைக்கு நிதியை வழங்கியுள்ளது யார் என்பது தொடர்பில் தொடர்ந்தும் தெளிவில்லாத நிலையே காணப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்