முறிகல் கொடுக்கல் வாங்கலில் உறவினர்களுக்கு எவ்வாறு சலுகை வழங்கப்பட்டது என்பது குறித்து தகவல்

முறிகல் கொடுக்கல் வாங்கலில் உறவினர்களுக்கு எவ்வாறு சலுகை வழங்கப்பட்டது என்பது குறித்து தகவல்

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 8:34 pm

மத்திய வங்கியின் முறிகல் கொடுக்கல் வாங்கலின் போது உறவினர்களுக்கு எவ்வாறு சலுகை வழங்கப்பட்டுள்ளது என கணக்காய்வாளர் நாயகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த 8 வருட முறிகல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2008 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முறிகல் விநியோகத்தின் போது பின்பற்றப்பட்ட முறைகளுள் ஒன்றான நேரடி முறையின் ஊடாக, முறிகல் விநியோகித்தமை தொடர்பில், உறுதியான 10 கேள்விகளை வினவி, 2016 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நிதி அமைச்சர் கணக்காய்வாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தார்.

குறித்த வேண்டுகோளுக்கு பதிலளிப்பது தனது வரம்பிற்கு அப்பாற்பட்டது என்ற போதிலும், தேசிய முக்கியதுவத்தை கருத்திற் கொண்டு இந்த அறிக்கையை நிதி அமைச்சருக்கு வழங்கியதாக கணக்காய்வாளர் நாயகம் கூறினார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கண்காணிப்புக்கு அமைய 2008 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நேரடி முறையின் ஊடாக தனியார் பிரிவின் ஆரம்ப வர்த்தகர்களுக்கு முறிகல் விநியோகிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பேர்பேச்சுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு 2500 மில்லியன் மாத்திரமே வழங்க வேண்டியிருந்தது.

இந்த நிதி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 13 முறிகல் விநியோகங்களின் போது வழங்கப்பட்டுள்ளன.

எனினும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெற்ற ஏலத்தில், இந்த நிறுவனம் 5 பில்லியன் ரூபாவை பெற்றது.