மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம்

மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம்

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 7:54 pm

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் விமானப்படையினர் வசமுள்ள சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பினை இன்று விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அது இடம்பெறவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் விடுவிக்கப்படுவதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக குறித்த இடத்திற்கு சென்றிருந்த கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்தித்தனர்.

எனினும் சம்பவ இடத்திற்கு கேப்பாப்பிலவு கிராம சேவகர் சென்றிருந்த போதிலும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குரிய காணி உத்தியோகத்தர்கள் வருகை தந்திருக்கவில்லை.

இதன் பின்னர் காணி அளவீடு செய்வதற்காக வன வள திணைக்கள அதிகாரிகள் காணி அமைந்துள்ள பகுதிக்கு சென்றிருந்த போதிலும் உயர் அதிகாரிகள் வருகை தராமைக்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் பதற்ற நிலை தோன்றியது.

மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக மக்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

இந்த விடயம் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

எனினும் குறித்த காணி விடுவிப்பது தொடர்பிலோ குறித்த மக்களை இடத்திற்கு வருகை தருமாறும் தாம் அழைப்புவிடுக்கவில்லை என கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார் .

சுமார் 30 தொடக்கம் 40 ஏக்கர் காணிகள் மாத்திரமே குறித்த பகுதியில் விடுப்பதற்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.