சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2017 | 7:27 pm

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீரினை குடிக்கலாமா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை முறையான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார்.

வழக்கினை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் இருமுறை அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பில் இதுவரை எதுவித ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் வடமாகாண சபை மற்றும் மத்திய அரசினால் இரு அறிக்கைகள் பரஸ்பரமாக வெளியிடப்பட்டிருந்தாலும், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.