ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்த வாரம் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்த வாரம் ஆரம்பம்

By Sujithra Chandrasekara

31 Jan, 2017 | 9:57 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாளாந்த பத்திரிகைகள் சில இன்று (31) செய்தி வெளியிட்டிருந்தன.

தலைமைத்துவம் சவாலுக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகைய அறிமுகப்படுத்துவதற்கு தலைமைத்துவம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை குழப்பும் பிரிவினைவாத குழுக்களுக்கு அரசியல் அமைப்பு என்று பிரச்சாரம் செய்வது மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கு காரணமாகியுள்ளதாக லங்கா தீப மற்றும் டேய்லி மிரர் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (30) ஆலோசானை வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்கிளில் இவ்வாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் அது வெற்றிக்கு வழிவகுக்கவில்லை என முன்னாள் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்கள் சில.

* தலைவரை மாற்ற வேண்டும் என கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. – 2000 ஆம் ஆண்டு    கண்டியில் நடைபெற்ற  மாநாட்டில் முழுநேர பொதுச் செயலாளர் நியமித்தல்.

* 2004 ஆம் ஆண்டு தோல்வியை அடுத்து கட்சிக்குள் எழுந்த உள்ளக குழப்பத்தினை குறைப்பதற்கு     பிரதி பொதுச்செயலாளர் உட்பட சில பதவிகள் உருவாக்கப்பட்டன.

* ஐக்கிய தேசியக் கட்சியின் 17 பேர் விலகியதை அடுத்து உள்ளக பிரச்சினையை     கட்டுப்படுத்துவதற்காக 2006 ஆம் ஆண்டு செயற்குழுவினை விஸ்தரித்ததுடன், யாப்பு சீர்திருத்தம்    மேற்கொள்ளப்பட்டது.

* கட்சியின் வாழ்நாள் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சிக்குள் எழுந்த    பிரச்சினைகளை தீரத்து தலைமைத்துவத்தினை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகளை  உருவாக்குவதற்கு ஜோசப் மைக்கல் பெரேராவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு யாப்பு  மாற்றப்பட்டது.

* தலைமைத்துவத்தினை ஆறு வருடங்களுக்கு ஒரு தடவையே, பொதுத்தேர்தலுக்கு பின்னர்  தேர்தெடுக்க வேண்டும் என்ற சரத்து உள்ளடக்கி 2012 ஆம் ஆண்டு யாப்பு சீர்திருத்தப்பட்டது.

இவ்வாறு பல பதவிகளை, மாற்றங்களை உருவாக்கி, தலைமைத்துவத்தினை பாதுகாப்பதற்கு மாத்திரம் முயற்சித்ததின் பிரதிபலனே தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியடைந்தாக சிரேஷ்ட செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.