வில்பத்து சரணாலயப் பகுதியை விரிவுபடுத்தி வான் மார்க்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வில்பத்து சரணாலயப் பகுதியை விரிவுபடுத்தி வான் மார்க்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2016 | 8:06 pm

வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி வன ஜீவராசிகள் வலயமாக மீண்டும் வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

வில்பத்து உள்ளிட்ட அனைத்து சரணாலயங்களையும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வான் மார்க்கமாக அவ்வப்போது கண்காணிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏதேனுமொரு முறையில் முன்னெடுக்கப்படும் காடழிப்பிற்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காடழிப்பிற்கு எதிராக தற்போது காணப்படும் சட்டத்திற்கு அமைய, அபராதம் மற்றும் சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி இதன்போது கோரியுள்ளார்.

சுற்றாடல் அமைச்சு, வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த கண்காணிப்புக் குழுவில் உள்ளடக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இந்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக புதிதாக காணியை ஒதுக்கும் போது, காடுகளுக்கு அப்பாலுள்ள காணிகளை அதற்காகப் பயன்படுத்துமாறும், அவ்வாறான காணிகளை இனங்காண்பதற்கு விசேட திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்