ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்: சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்: சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 8:22 pm

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கு, மாநில அரசு தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகள் அதனை ஆய்வுசெய்ய வேண்டுமெனக் கோரி பொது நல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான பி.ஏ. ஜோசப் ஸ்டாலின்,
இந்த பொது நல வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படுத்த, மாநில அரசுக்கும் ஜெயலலிதா சிகிச்சைபெற்ற வைத்தியசாலைக்கும் இடைக்கால உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து ஆய்வுசெய்யுமாறு உத்தரவிட வேண்டுமா என கேள்வியெழுப்பியுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில், மத்திய அரசும் ஏன் எந்தத் தகவலையும் வெளியடவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

ஜெயலலிதா, ஆவணங்களில் கையெழுத்திட்டார், கூட்டங்களை நடத்தினார் என கூறப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு, எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்