அத்தியாவசியப் பயிர்களை இறக்குமதி செய்வதால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிப்பு

அத்தியாவசியப் பயிர்களை இறக்குமதி செய்வதால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2016 | 8:48 pm

நாட்டில் பயிரிடக்கூடிய அத்தியாவசியப் பயிர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதினால் தாம் பாரியளவில் சிரமங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் கேள்விக்கு ஏற்ப விநியோகிப்பதற்கு பல்வேறு காரணங்களினால் முடியாதுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

செத்தல் மிளகாய் , உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், பயறு மற்றும் சோளம் போன்ற அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் உற்பத்தி கடந்த இரண்டு வருடங்களில் ஒப்பிடுகையில் 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

கேள்விக்கேற்ப உள்நாட்டு உற்பத்திகள் கிடைக்காமையினால் பாரியளவு அந்நிய செலாவனி ஊடாக பொருட்களை அரசாங்கத்திற்கு இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 5 பொருட்களின் இறக்குமதிக்கு மாத்திரம் 7 ,246 மில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வருடாந்த உருளைக்கிழங்கு தேவையின் 50 வீதமும் பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் 60 வீதமும் செத்தல் மிளகாய் 90 வீதமும் பயிர் மற்றும் சோளம் 10 வீதமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் பயனுள்ளதாக இல்லை எனவும் அடிப்படை வசதிகள் வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமையினாலும் தாம் பாரியளவில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேவேளை உரமானியம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை ஊடாக உள்நாட்டு விவசாயினத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விவசாய சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்