முஸ்லிம்களுக்கான காணி பகிர்ந்தளிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

முஸ்லிம்களுக்கான காணி பகிர்ந்தளிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2016 | 6:59 pm

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதா சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு துரித செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதை வட மாகாண முதலமைச்சர் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் 2801 முஸ்லிம் குடும்பங்கள் தொடர்ந்தும் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 24040 முஸ்லிம் குடும்பங்கள் வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட மாகாண காணி ஆணையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, வடக்கில் 73.02 வீதமான முஸ்லிம் மக்கள் காணிகளை பெற்றுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் காணி அமைச்சராகிய தனது அங்கீகாரத்துடன், அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் தயாராகவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட பயனாளிகளின் ஒரு பகுதியினர் இதுவரை தங்களுடைய காணிகளில் மீள்குடியேறாது, புத்தளம் போன்ற பகுதிகளில் வசித்து வருவதால், அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் கொடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் தங்களின் காணிகளில் மீள்குடியேறும் பட்சத்தில் அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கப்படும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்