உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்கள் பிரதமருக்கு கடிதம்

உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்கள் பிரதமருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2016 | 8:01 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய, மற்றும் மல்வத்து மஹாநாயக்க தேரர்களை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.

மஹாநாயக்க தேரர்களின் கையொப்பங்களுடன் கூடிய இரண்டு விசேட கடிதங்கள் இதன்போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டன

கண்டி ஶ்ரீ தலதாமளிகைக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வறக்காகொட ஶ்ரீ பஞ்ஞானந்த ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.

இதன்போது அஸ்கிரிய மஹாநாயக்க தேரரின் கையொப்பத்துடன் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் 5 முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

உத்தேச அரசியலமைப்பில் இலங்கை, ஒற்றையாட்சி நாடாக காணப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபை அதிகாரங்கள் மற்றும் சட்டங்கள் உருவாக்கப்படும் பொழுது மாகாண சபையின் நிறைவேற்றதிகாரம், மத்திய அரசின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் காணப்பட வேண்டும்.

நடைமுறையிலுள்ள நீதி கட்டமைப்புக்கு புறம்பாக வேறு நீதிமன்றமோ அரசியல் அமைப்பு ரீதியான நீதிமன்றமோ ஸ்தாபிக்கப்படக் கூடாது எனவும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் மற்றும் தேசிய கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரின் கடிதத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியை மூலாதாரமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்ற காரணங்களே அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என மஹாநாயக்க தேரர் தனது கடிதத்தில் வலியுறுதித்தியுள்ளார்.

இதன் பின்னர் பிரதமர் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவ ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றார்.

இதன்போது விசேட கோரிக்கைகள் சிலவற்றை உள்ளடக்கிய கடிதம் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு அல்லது அரசியலமைப்பு மறு சீரமைப்பு, வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான விசேட அதிகாரங்களை வழங்குவது தொடர்பன விடயங்கள் அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இனவாத,மதவாத,கட்சி பேதம் போன்ற குறுகிய கொள்கைகளுக்குள் சிறைப்பட்டு தற்போதைய சவால்களை வெற்றி கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் வகையில் தேசிய மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் இருப்பின் அவற்றை அனுமதிக்க முடியாது என மஹாநாயக்க தேரர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரணாலயங்களில் குடியேற்றங்களை அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மஹாநாயக்க தேரர் வடக்கு கிழக்கில் விகாரைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்