ரவிராஜ் கொலை வழக்கு: முதலாவது சாட்சியாளரை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவு

ரவிராஜ் கொலை வழக்கு: முதலாவது சாட்சியாளரை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 8:13 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு முதலாவது சாட்சியாளரான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரியை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க தலைமையில் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.

ரவிராஜ் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ப்ரிதிவி ராஜ் மனப்பேரி கடந்த 20 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பை அடுத்து அவர் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டார்.

பிரித்திவிராஜ் மனம்பேரியிடம் சாட்சி விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, அவரை இந்த வழக்கின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் சாட்சியளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்த தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயரத்னவிடம் குறுக்கு கேள்வி கேட்பதற்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் பிரதிநிதித்துவப்படுத்துவற்கான அனுமதி காணப்படுகின்ற போதிலும் அவர்களினால் பிரதிவாதி சாட்சியாளர், ஒருவரிடம் குறுக்கு கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்குவது அகௌரவமான செயற்பாடு என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது .

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலன்த ஜயவர்த்தன பிரதிவாதி தரப்பு சாட்சியாளராக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் .

இதனையடுத்து ரவிராஜின் படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று பிரதிவாதிகளும், குற்றவாளி கூண்டிலிருந்து இன்று தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பதற்கு உயிரை பணயம் வைத்து போராடிய தங்கள் மீது இவ்வாறான கொலை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை கவலைக்குரிய விடயம் என பிரதிவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் அவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரவிராஜின் படுகொலை சம்பவத்தின் மூன்றாவது பிரதிவாதியான கடற்படை வீரர் காமினி செனவிரத்ன, அரச தரப்பு சாட்சியாளராக சாட்சியம் வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி வழங்கிய அனைத்து சாட்சியங்களும் பொய் என குறிப்பிட்டுள்ளார்.

நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான விசேட ஜூரிகள் சபையின் சாட்சி விசாரணைகள் அனைத்தும் இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய நாளைய தினம் இருதரப்பு தொகுப்புரை நடைபெறவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் நாளைய தினம் வாய்மூலம் சமர்ப்பனம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்