சிறப்பு அமைச்சுப் பதவியை உருவாக்கினால் ஜனாதிபதி, பிரதமருக்கு அதிகாரமில்லாமல் போய்விடும்

சிறப்பு அமைச்சுப் பதவியை உருவாக்கினால் ஜனாதிபதி, பிரதமருக்கு அதிகாரமில்லாமல் போய்விடும்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 8:50 pm

அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் முயற்சிகள் தொடர்பில், இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய ஆகியோர் விமர்சனங்களை வெளியிட்டனர்.

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 85 வீதமான பங்குகளை சீனாவின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை ஜனவரி மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.

அத்துடன், ஹம்பாந்தோட்டை மற்றும் அதனை சூழவுள்ள 15,000 ஏக்கர் காணி அபிவிருத்தித் திட்டமொன்றுக்காக வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் ஒத்துழைப்புடன் திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட அபிவிருத்தி வலயம் உருவாக்கப்படவுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஹம்பாந்தோட்டையை சீனாவிற்கும், திருகோணமலையை இந்தியாவிற்கும் வழங்கும் செயற்பாடுகளுடன் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் முயற்சிகள் தொடர்பில், இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் டிலான் பெரேரா பின்வருமாறு தெரிவித்தார்..

[quote]வன் ஸ்டொக் ஷொப் என காண்பித்து, அனைத்து அதிகாரங்களையும் பெற்ற ஒரு முதலாளியை உருவாக்குவதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். புதிய அரசியலமைப்பொன்றை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். நாம் அதிகாரத்தை மேலும் பகிர வேண்டும். இந்த பின்புலத்தில் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பது தவறானது.[/quote]

இதன் போது கருத்து தெரிவித்த இசுர தேவப்பிரிய…

[quote]நாளை பிற்பகல் 3 மணிக்கு, அனைத்து முதலமைச்சர்களும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வமற்ற இதுபோன்ற சிறப்பு அமைச்சர்கள் எமது அரசாங்கத்தில் இருந்தனர். அன்று எதிர்க்கட்சியிலிருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த விமர்சனங்களை இன்று அவர்கள் மறந்துள்ளனர். நாம் தெளிவாக ஒரு விடயத்தைக் கூறுகின்றோம். சிறப்பு அமைச்சை உருவாக்கினால், ஜனாதிபதிக்கும் அதிகாரமில்லாது போய்விடும். பிரதமருக்கும் அதிகாரமில்லாமல் போய்விடும். முதலமைச்சர்களாலும் எதனையும் செய்ய முடியாது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்