சபாநாயகரின் பொறுப்பை பிரதமர் அபகரித்துள்ளதாக சுனில் ஹந்துன்னெத்தி தெரிவிப்பு

சபாநாயகரின் பொறுப்பை பிரதமர் அபகரித்துள்ளதாக சுனில் ஹந்துன்னெத்தி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2016 | 7:53 pm

முறிகல் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை பிரதமர், சட்ட மாஅதிபருக்கு வழங்குகியமையினால் சபாநாயகரின் பொறுப்பை பிரதமர் அபகரித்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

முறிகல் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை 2017 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு சுனில் ஹந்துன்னெத்தி சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அது பாராளுமன்றத்தின் ஒரு ஆவணம் என சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணம் தொடர்பில் சபாநாயகரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால், அதுகுறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் அல்ல எனவும் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் அனைத்து பிரதிநிதிகள் சார்பாகவும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, சபாநாயகர் வசமுள்ளமையால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதனை விவாதத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்த விடயம் பின்வருமாறு…

[quote]இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்ப வேண்டுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இல்லை. இது அரசாங்கத்தின் செயற்பாடு அல்ல. இது பாராளுமன்றத்தின் செயற்பாடாகும். ஆகவே இதன் முழுமையான பொறுப்பை சபாநாயகருக்கே உள்ளது. சபாநாயகர் பாராளுமன்றத்தின் நிலைமைகள் தொடர்பில் நன்கு அறிந்தவர். ஆகவே அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு தீர்மானம் எடுக்கும் உரிமையை பாராளுமன்றத்திற்கு வழங்குமாறு சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரியுள்ளேன்.[/quote]

இதேவேளை சுனில் ஹந்துன்நெத்தியின் கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்புமாறு பிரதமர் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சபாநாயகருக்கு வாய்மொழி மூலம் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட மாஅதிபர் கோரும் ஏனைய ஆவணங்களை சபாநாயகரின் அனுமதியுடன் வழங்குமாறு பிரதமர், நவம்பர் 9 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளதுடன், விவாதத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால், குழுவின் அறிக்கை சட்ட மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவது, சட்டபூர்வமானது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனது நிர்வாகத்தின் கீழ் சேவையாற்றும் ஊழியர் ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மாஅதிபரின் நிலைப்பாட்டை வினவுவது, சாதாரண விடயம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோப் குழுவின் தலைவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், அவரது செயலாளரின் ஊடாக அறிக்கை, சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்