காணாமற்போனோர் தொடர்பில் தீர்வில்லை: ஆட்சி மாற்றத்திற்காக பங்களிப்பு செய்தவர்கள் ஏமாற்றத்தில்

காணாமற்போனோர் தொடர்பில் தீர்வில்லை: ஆட்சி மாற்றத்திற்காக பங்களிப்பு செய்தவர்கள் ஏமாற்றத்தில்

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2016 | 9:48 pm

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது காணாமற்போனோர் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் எதனையும் ஆட்சியாளர்கள் இதுவரை வழங்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு தரப்பினர்களாலும், சர்வதேச ரீதியாகவும் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் கடந்த 7 வருடங்களாக அரசாங்கங்களினால் வெவ்வேறு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பொருட்டு, முன்னைய அரசாங்கத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமற்போனோர் தொடர்பிலான சுமார் 22,000 க்கும் அதிகமான முறைப்பாடுகளை காணாமற்போனோரின் உறவுகளும், பாதுகாப்பு பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் முன்வைத்திருந்தனர்

இதன் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட ரீதியாக பல்வேறு கட்டங்களில் காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையும், பரிந்துரைகளும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகமொன்றை பிரதமர் செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் ஸ்தாபிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்படி, கடந்த மே மாதமளவில் பாராளுமன்றத்திற்கு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த சட்டமூலம் ஆகஸ்ட் மாதத்தில் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்திற்காக பங்களிப்பு வழங்கிய தமக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளதாக காணாமற்போனவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டினர்.

காணாமற்போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்துடன் தொடர்புகொண்டு நியூஸ்பெஸ்ட் வினவியது.

காணாமற்போனோர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அந்த அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மிக விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்