கட்டுப்பாட்டில் இருந்த கப்பல்களை விடுவித்த கடற்படை: ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சிலர் காயம்

கட்டுப்பாட்டில் இருந்த கப்பல்களை விடுவித்த கடற்படை: ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சிலர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 7:55 pm

தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து, ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இரு கப்பல்களையும் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கையில் இன்று முற்பகல் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை – மாகம் ருகுணுபுர துறைமுகத்தினை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதால், தமது தொழில் வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கடந்த புதன்கிழமை இந்த பணிப்பகிஷ்கரிப்பை துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்தனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையால், வாகனம் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் வருகை தந்த இரு கப்பல்கள், சேவைகளைப் பெற முடியாமல் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இந்த கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ள இடத்தில் இன்று காலை துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த இடத்தினை அண்மித்த கடற்படையினர் ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கப்பல்களையும் படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கையில் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் இணைந்து கொண்டிருந்தார்.

இதன்போது ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாகவும் இரு கப்பல்கள் மற்றும் படகுகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வாகனம் ஏற்றிவந்த கப்பல் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும், கட்டட நிர்மாணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் சீன நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது கப்பல் பணியாளர்களும் கப்பல்களில் இருந்தனர்.

இதேவேளை, மாகம் ருகுணுபுர துறைமுக நுழைவாயிலில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்