வீதி விபத்துக்களைத் தவிர்ப்போம்: நியூஸ்பெஸ்ட்டின் தேசிய செயற்றிட்டம் தம்புள்ளையில் ஆரம்பம்

வீதி விபத்துக்களைத் தவிர்ப்போம்: நியூஸ்பெஸ்ட்டின் தேசிய செயற்றிட்டம் தம்புள்ளையில் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2016 | 9:12 pm

நாளாந்தம் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள், சொத்துக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் தேசிய செயற்றிட்டம் தம்புள்ளையில் இன்று ஆரம்பமானது.

”வீதி விபத்துக்களைத் தவிர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டத்திற்கு இலங்கை பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இந்த வருடம் ஜனவரி தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 29,630 வாகன விபத்துக்கள் சம்பவித்துள்ளன.

இந்த 10 மாத காலப்பகுதியில் மரணங்கள் ஏற்பட்ட 2019 விபத்துக்களும், 6142 பாரதூரமான விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

11,132 சிறியளவிலான விபத்துக்களும், 10,266 விபத்துக்களினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயகரமான நிலையைக் கவனத்தில் கொண்ட நியூஸ்பெஸ்ட், வாகன விபத்துக்களில் இருந்து உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில், வாகன விபத்துக்களைத் தடுப்போம் என்ற தேசிய செயற்றிட்டத்தை தம்புள்ளையில் இன்று ஆரம்பித்தது.

தம்புள்ளை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள நகர மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை பொலிஸின் உயர் அதிகாரிகள், பிரதேசத்தின் முச்சக்கரவண்டி சாரதிகள், பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் சாரதிகள் இன்றைய விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டனர்

வாகன விபத்துக்களைத் தடுக்கும் தேசிய செயற்றிட்டம் அடுத்து தங்காலை நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்