நடராஜா ரவிராஜின் மனைவி விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் சாட்சியம்

நடராஜா ரவிராஜின் மனைவி விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் சாட்சியம்

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 8:03 pm

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

சட்டத்தரணியாகப் பணியாற்றிய தமது கணவர் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் அரசியலில் பிரவேசித்ததாக மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் நடைபெற்ற இந்த சாட்சிப்பதிவின்போது சசிகலா ரவிராஜ் கூறியுள்ளார்.

ஆசிரியையான தாம் கணவரின் அரசியல் நடவடிக்கைகளுடன் எந்த வகையிலும் தொடர்புபடவில்லை என தெரிவித்த சாட்சியாளர், தமது கணவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதை பாடசாலையில் இருந்தபோதே அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கணவரின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், பாடசாலையில் இருந்த தமக்கு இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் அறிவித்ததாக சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்து வீட்டுக்கு சென்றபோது கணவரின் ஜீப், ஹைலெவல் வீதிக்கு அருகிலுள்ள மாதா வீதியில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பு 16 ஆவது சாட்சியாளரான பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அவரிடம் இன்று சாட்சிப்பதிவு செய்யப்பட்டதுடன் மேலதிக சாட்சிப் பதிவு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலதிக சாட்சிப் பதிவுகளுக்காக நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சாட்சியாளருக்கு உத்தரவிட்ட பிரதம நீதிபதி, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை விளக்கமறியலில் வைக்க நேரிடும் என அறிவுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்