தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பை ஈடு செய்ய முடியாது – இந்து மாமன்றம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பை ஈடு செய்ய முடியாது – இந்து மாமன்றம்

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 8:48 pm

இலங்கைத் தமிழர்களுக்கு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆதரவை நல்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பை ஈடு செய்ய முடியாதென அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் பணியாற்றி வந்த ஜெயலலிதா ஜெயராம், தமிழ் நாட்டின் ஆலயங்களின் மேன்மைக்காகவும் இந்து சமைய மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை வகுத்திருந்ததாக அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஜெயலலிதா ஜெயராமுக்கு தனி இடமுள்ளதாகவும், மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோதெல்லாம் சர்வதேச ரீதியில் துணிந்து குரல் கொடுத்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகளுக்கு பல வகைகளிலும் வழங்கிய ஆதரவையும் உதவிகளையும் இலங்கை மக்கள் எப்போதும் நினைத்துப் போற்றுவார்கள் என அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழர்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவு தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய தமிழர்கள் மத்தியில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

துணிச்சலான பெண்ணாக சவால்களை வெற்றிகொண்டு தமிழக மக்களின் வறுமையைப் போக்குவதற்கு ஜெயலலிதா ஜெயராம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபோது இலங்கை பாராளுமன்றத்தில் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்த வேளை தாம் அவருக்காக குரல் எழுப்பியதையும் ஜே.ஶ்ரீரங்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்மாவின் அரவணைப்பை இழந்து தவிக்கும் தமிழக மக்களின் துக்கத்தில் உலகவாழ் தமிழ் மக்களும் பங்கெடுத்துக்கொண்டுள்ளதாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்