அமைச்சர் தயா கமகேவிற்கு அம்பாறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கண்டனம்

அமைச்சர் தயா கமகேவிற்கு அம்பாறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

07 Dec, 2016 | 10:10 pm

அமைச்சர் தயா கமகே, பிரதேச செயலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களும் இன்று கண்டனம் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய பிரதேச செயலகத்திற்கான கட்டடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஏற்பட்ட சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சர் தயா கமகே குறித்த பிரதேச செயலாளரை அச்சுறுத்தியதாக அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தெஹியத்தகண்டிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்து இந்த சம்பவத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதேவேளை, லாஹூகல பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்த வண்ணம் இன்று கடமைகளில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தாம் அதிருப்தி வெளியிடுவதாக அரச நிர்வாக சேவை சங்கத்தின் அம்பாறை கிளை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கும் அமைச்சர் தயா கமகே தமது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்