தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல்: இருதரப்பு விசாரணைகளும் நிறைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல்: இருதரப்பு விசாரணைகளும் நிறைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல்: இருதரப்பு விசாரணைகளும் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2016 | 7:16 pm

யாழ். தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இருதரப்பு விசாரணைகளும் இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளன.

யாழ். மேல் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், இன்று இருதரப்பு சடத்தரணிகளும் தங்களின் தொகுப்புரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 20ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 04 பிரதிவாதிகளுக்கு எதிராக எவ்வித சந்தேகங்களும் இன்றி சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவர்களுக்கு இரட்டை மரண தண்டனையும், தாக்குதலின் போது காயம் ஏற்படுத்தியமைக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையும் வழங்குமாறு பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து நான்கு மணித்தியாலங்களாக தொகுப்புரையை சமர்ப்பித்து, வழக்கு விசாரணைகளை நிறைவு செய்வதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி நீதிபதி முன்னிலையில் அறிவித்துள்ளார்.

எனினும், வழக்கு விசாரணைகளில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சாட்சிப்பதிவுகளில் சந்தேகங்கள் நிலவுவதாகவும் தெரிவித்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், இந்த கொலை சம்பவத்திற்கும் தமது கட்சிக்காரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நீதிபதியிடம் அறிவித்துள்ளனர்.

எனவே, கொலைக் குற்றச்சாட்டிலிருந்து பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது மூன்றாம், நான்காம் பிரதிவாதிகள் சார்பில் மேலதிக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இரதரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளின் நிறைவின் பின்னர் வழக்கின் இறுதித் தீர்ப்பை நாளை காலை 10.30 ற்கு அறிவிப்பதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்