தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் புரட்சித் தலைவியின் பூதவுடல் நல்லடக்கம்

தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் புரட்சித் தலைவியின் பூதவுடல் நல்லடக்கம்

தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் புரட்சித் தலைவியின் பூதவுடல் நல்லடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2016 | 5:42 pm

தமிழ் மக்களுக்காய் வாழ்வை அர்ப்பணித்த புரட்சித் தலைவி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் இன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்றிரவு அமரத்துவம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட தமிழக முதல்வரின் பூதவுடல் இன்று அதிகாலை வரை போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை பூதவுடல் சென்னை ராஜாஜி அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய குடிரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழகத்தின் பொருளாளரும் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், அரச அதிகாரிகள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் என பலரும் ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.

திரையுலகிலும் நீங்காத சாதனைகள் பலவற்றைப் புரிந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரையுலக பிரபலங்களும் அலையெனத் திரண்டிருந்தனர்.

இன்று மலை 4.20 க்கு ராஜாஜி அரங்க வளாகத்தில் வெள்ளமாய் திரண்டிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.

அம்மாவின் நலன் வேண்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழக மக்கள், புரட்சித் தலைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியோரங்களில் திரண்டிருந்தனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் அம்மாவின் அசையா உடல் சுமந்து செல்லப்பட்டது.

இலட்சக்கணக்கான மக்கள் தமது விழிநீரை அஞ்சலியாக செலுத்தினர்.

பூதவுடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்திற்கு அருகே ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பயணம் செய்தனர்
தமிழக அரசியலில் புரட்சிகள் பல புரிந்து புரட்சித் தலைவராய் மீளாத் துயில் கொண்ட எம்.ஜி.ஆர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதி, புரட்சித் தலைவியின் வருகையை ஏற்பதற்குத் தயாராகவிருந்தது.
அம்மா, அம்மா என தொண்டர்கள் கதறியழ, புரட்சித் தலைவியின் பூதவுடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்