அசாத்திய ஆளுமை, எடுத்த சபதங்களை நிறைவேற்றியவர்: ஜெயலலிதா குறித்த நினைவலைகள்

அசாத்திய ஆளுமை, எடுத்த சபதங்களை நிறைவேற்றியவர்: ஜெயலலிதா குறித்த நினைவலைகள்

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2016 | 3:41 pm


அன்பில் அன்னை தெரசாவாகவும், ஆற்றல்மிக்க வீரத்தில் ஜான்சிராணி லட்சுமிபாயாகவும் இனிமையாகப் பழகுவதில் இளகிய மனம்கொண்டவராகவும், ஈகை குணத்தில் எட்டாவது வள்ளலாகவும் உழைப்பில் உன்னதமாகவும் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று..’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப இருந்தவர் ஜெயலலிதா.
“வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி…. மக்கள் மனதில் நின்றவர் யார்…’ என்ற எம்.ஜி.ஆர் பாட்டுக்கேற்ப, அவரது வழியில் வாழ்ந்து மறைந்தவர்.

பெண்கள் நலனுக்காகவும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயரவும் முதல்வர் ஜெயலலிதா செயற்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள்தான், 2011 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியையும் அதிமுகவுக்கு அளித்தது.

கலைத்துறையில்- திரைத்துறையில் சாதனைகள் படைத்த முதல்வர் ஜெயலலிதா, 1982 ஆம் ஆண்டு அரசியல் களத்தில் அதிமுகவில் நுழைந்தார். அவரை அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தினார்.

அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலராகவும் சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பேற்றவர். அப்படிப்பட்டவர் மூன்று பதவிகளிலும் ஒரே நேரத்தில் சரியான முறையில் பணிபுரிந்தவர்.

எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவால் 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அவரது வழியில் அவருக்காக பிரசார வியூகத்தை நடத்தியவர் முதல்வர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர், ஜானகி தலைமையிலும், ஜெயலலிதா தலைமையிலும் இரு அணிகள் ஏற்பட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கே கட்சியினர் ஆதரவு அளித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் ஏற்கெனவே எம்.ஜி.ஆர் தலைமையில் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளிலும், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளிலும் அதிமுக 6 முறை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இப்போது 2016 பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று, 7ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக, 1984 க்குப் பிறகு அதிமுக ஆட்சியைத் தக்கவைத்து முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சாதனை படைத்தார்.

மக்களவைத் தேர்தலில் ஒன்றிரண்டு தேர்தல்களில் அதிமுக சரிவைச் சந்தித்திருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமோக வெற்றிகளைக் குவித்துள்ளது. 1977 ஆம் ஆண்டு மக்களவைக்கான பொதுத்தேர்தலை அதிமுக முதல் முறையாக எதிர்கொண்டது. அப்போது இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இல் வென்றது.

இதையடுத்து, மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்த பிறகு, 1979 ஆம் ஆண்டில் பிரதமரான சரண் சிங் அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த சத்தியவாணி முத்து உட்பட 2 பேர் இடம் பெற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மாநிலக்கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு முதலில் வழிவகுத்துக் கொடுத்தது அதிமுகதான்.

1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, அதிமுக 24 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இல் வெற்றி பெற்றது. அடுத்து வந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 1984 ஆம் ஆண்டில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு 12 லும், 1989, 1991ஆம் ஆண்டுகளில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு பதினொன்றையும் அதிமுக கைப்பற்றியது.

1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும், அதற்கடுத்து 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பாஜக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகித்தது.

1999 ஆம் ஆண்டு மக்களவைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, 29 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் அதிமுக வென்றது. அதன் பிறகு, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு பாஜகவும், அதிமுகவும் இணைந்து போட்டியிட்டன. இதில் அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. இருப்பினும், அடுத்தடுத்த தேர்தல்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமானது. 2009 ஆம் ஆண்டு பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 இல் வென்றது.

இந்நிலையில், 2014 மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்தது. தற்போது மக்களவையில் 37 எம்.பி.க்களுடன் 3 ஆவது பெரிய கட்சியாகவும், மாநிலங்களவையில் 5 ஆவது பெரிய கட்சியாகவும் அதிமுக உள்ளது. மாநில அளவிலான கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்ற பெருமையும் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளது.

வழக்கமாக, திராவிடக் கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்தித்ததில்லை. கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கும். அதிகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தவையே மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெறும். ஆனால், 2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. அப்போது 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளில் அனைத்தையும், பிற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளில் 80 சதவீதத்துக்கும் மேலாகவும் அதிமுக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் கண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, விஷன் 234 எனும் திட்டத்தை அறிவித்து, இந்தப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவை களம் இறக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார். இதற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பை அளித்தனர். இந்தப் பேரவைத் தேர்தலில் சில சிறிய கட்சிகளுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி, அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் செய்தார் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மக்கள் நலன் பயக்கும் திட்டங்களாலும், சீரான சட்டம்- ஒழுங்காலும் திருப்தியடைந்திருந்த மக்கள் 134 தொகுதிகளில் அதிமுகவுக்கு அமோக வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றியை மக்களுக்கே அர்ப்பணித்தார் ஜெயலலிதா.

இதையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் அண்மையில் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவுக்கே வெற்றி கிடைத்தது.

சோதனைகளைத் தகர்த்தெறிந்து, பொய்ப் பிரசாரங்களை முறியடித்து, 10 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்தத் தாக்குதலை தன்னந்தனியே தனது பிரசாரத்தால் முறியடித்து, சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்தார்.

எடுத்த சபதங்களை நிறைவேற்றியவர்…!

*1989-90-ஆம் ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தார். அப்போது சட்டப் பேரவையில் முதல்வராக கருணாநிதி இருந்தார். அந்த நேரத்தில் சட்டப் பேரவையில் அசம்பாவித நிகழ்வு நடைபெற்றபோது, ஜெயலலிதா தாக்கப்பட்டார். இதையடுத்து, அவையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா, மீண்டும் சட்டப் பேரவைக்கு முதல்வராகவே நுழைவேன் என்று பேட்டியளித்தார். இதுபோலவே, 1991-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவே சட்டப் பேரவைக்குள் நுழைந்தார்.

* 2006-11-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைய மாட்டேன். மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தலைமைச் செயலகம் இயங்கும் என்று கூறி புதிய தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை நிகழ்வுகளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜெயலலிதா புறக்கணித்தார். இதன்படியே, 2011-இல் முதல்வராகி செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகத்தை இயங்கச் செய்தார்.

* 1998-99ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாஜக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தது. அப்போது, தமிழகத்தின் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா வைத்தார். அப்போது அதை வாஜ்பாய் ஏற்க மறுத்தார். இதையடுத்து, ஆட்சியை கவிழ்த்துவிட்டுதான் திரும்புவேன் என்று சென்னையில் இருந்து தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருடன் சேர்ந்து தேநீர் விருந்து நடத்தினார். இதன்படி, சில நாள்களில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக அரசும் கவிழ்ந்தது. இவ்வாறாக எடுத்த சபதங்களை நிறைவேற்றி காட்டியவர் ஜெயலலிதா என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 23 24

நன்றி – தினமணி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்