தமிழக முதலமைச்சர் ​​ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு

தமிழக முதலமைச்சர் ​​ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு

தமிழக முதலமைச்சர் ​​ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 10:32 pm

திடீர் சுகவீனமுற்ற நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழக முதல்வருக்கு இருதய மற்றும் சுவாசவியல் நிபுணர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திடீர் உடல்நலக் குறைவினால் கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி தமிழக முதல்வர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் லண்டன் மருத்துவ நிபுணர்கள், சிங்கப்பூர் உடற்கூற்றுவியல் நிபுணர்களால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் விசேட கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததாகவும், இறுதியாக உடற்கூற்றுவியல் சிகிச்சையின் பின்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என்றும் இந்திய தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.

இந்த நிலைமையின் கீழ், முதலமைச்சருக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக, அவர் சிகிச்சைப்பெற்று வரும் வைத்தியசாலை விடுத்துள்ள மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை இதுவரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 12 மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலைமையின் கீழ், அ.தி.மு.கவின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் உட்பட பலர் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் குழுமியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுதவிர தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை தனியார் மருத்துவமனை வளாகத்தில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்