கச்சத்தீவு  அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2016 | 7:18 pm

கச்சத்தீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், ஒப்பந்தத்தின் பிரகாரம், அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு இந்திய பிரஜைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டிருந்த கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா, 2010 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தீவில் புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, எதிர்வரும் 7 ஆம் திகதி அதன் திறப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகளில் 100 பக்தர்களையாவது அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கச்சத்தீவில் சிறிய வைபவம் ஒன்றே முன்னெடுக்கப்படுவதால், தமிழக மீனவர்களுக்கும், அதேபோன்று இலங்கை பக்தர்களுக்கும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

இதேவேளை, புனித அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழா எளிமையான முறையில் நடைபெறுவதால், ராமேஸ்வரம் பங்குத் தந்தைக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழக மீனவர்கள் அனுமதியின்றி டிசம்பர் 7 ஆம் திகதி கச்சத்தீவு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் என தமிழக செய்திகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், நாட்டின் கடல் எல்லையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை கடற்படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்