வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 9:56 pm

வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த நாடா சூறாவளி மீண்டும் தாழமுக்கமாக வலுவிழந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் காற்றுடன் கூடிய குளிரான வானிலை நேற்று முதல் நிலவி வருகின்றது.

காற்று காரணமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் சாவகச்சேரி – சப்பாச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பருத்தித்துறை பகுதியில் 4 படகுகளில் மீன் பிடி நடவடிக்கைக்காக 12 மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றிருந்தனர்.

எனினும், மூன்று படகுகள் கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், படகு ஒன்றும் மீனவர்கள் இருவரும் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என வடமராட்சி மீனவர் சங்கத் தலைவர் வை.அருள்தாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, பருத்தித்துறை கடற்பகுதியில் 5 இந்திய மீனவர்களுடன் படகு ஒன்று தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், மயிலிட்டி கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினர் மீனவர்களைப் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் மீனவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் என்பன கூட்டுறவு சங்கத்தினரால் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த கடற்படையினர் உரிய மீனவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் போது பொதுமக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பருத்தித்துறை பிரதேச செயலாளரின் உதவியுடன் இந்திய மீனவர்கள், கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தொடரும் சீரற்ற வானிலையால் மன்னார் மாவட்ட மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடாமல் பாதுகாப்பான இடங்களில் இன்று தமது படகுகளை வைத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் குளிரான வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் மழை மற்றும் குளிரான வானிலை காரணமாக கொட்டில்களில் வாழ்பவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வவுனியாவிலும் நிலவும் மழையுடனான குளிரான காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்