நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2016 | 1:12 pm

யாழ், சாவகச்சேரி பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 8.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் பலத்த காற்று வீசியதாகவும் இதன்போது மோட்டார் சைக்கிளில் தொழிலுக்காக சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது மரம் முறிந்து வீழ்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

சம்பவத்தில் சாவகச்சேரி சப்பச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த நபர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை தென் மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள நாடா சூறாவளி, காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள கடற் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சூறாவளி வட மேல் திசை நோக்கி மெதுவாக நகர்ந்து செல்லும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடா சூறாவளி இன்று நள்ளிரவு தமிழகத்தின் வட பகுதியூடாக நகரும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர கடற் பிராந்தியங்கள் சிலவற்றிலும் தற்காலிகமாக கொந்தளிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் கடும் குளிர் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லாமல், தமது படகுகளை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்த்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மேலும் யாழ். பருத்தித்துறை பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 8 மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என வடமராட்சி மீனவர் சமாசத் தலைவர் வைத்திபிள்ளை அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

நான்கு படகுகளில் நேற்று மாலை 4 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்களே இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மைலிட்டி முகாம் பகுதியிலிருந்து சென்ற 2 படகுகளும், சுப்பர்மடம் மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் இருந்து சென்ற படகுகளும் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை.

சீரற்ற வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மீனவர்கள் நேற்று மாலை கடலுக்குச் சென்றிருந்ததாகவும், பின்னர் திடீரென பலத்த காற்று வீச ஆரம்பித்ததாகவும் வடமாராட்சி மீனவர் சமாச தலைவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்