தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் மூன்று சாட்சியங்கள் பதிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் மூன்று சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2016 | 10:13 pm

யாழ். தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் மூன்று சாட்சியங்கள் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர் ஆகியோர் இன்று சாட்சியமளித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகத்திற்கு தேர்தல் பரப்புரைக்குச் சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு, 20 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று வரை 11 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 32ஆம் 26ஆம் 17ஆம் 12ஆம் 9ஆம் சாட்சியங்களுக்குரியவர்கள் தங்களது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்போது வசிக்கவில்லை என மூன்று கிராம உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் நாளையும் சாட்சிப் பதிவு இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்