ரவிராஜ் கொலை வழக்கின் முதல் சாட்சியாளருக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

ரவிராஜ் கொலை வழக்கின் முதல் சாட்சியாளருக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 9:12 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முறைப்பாட்டாளர்கள் தரப்பு முதல் சாட்சியாளரான ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரிக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதன், கருணா குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களிடமிருந்து சாட்சியாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சாட்சியாளரின் உயிருக்கு LTTE தரப்பிடமிருந்தும் கருணா குழுவிடமிருந்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளைக் கவனத்திற்கொண்ட பிரதம நீதவான், சாட்சியாளருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் சாட்சியாளரிடம் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு விசாரணை இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், நாளை சட்ட மா அதிபரின் விசாரணை மீண்டும் இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்