பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகளால் மக்கள் பெரும் சிரமம்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகளால் மக்கள் பெரும் சிரமம்

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2016 | 8:32 pm

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகளால் மக்கள் இன்று பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.

இதனால் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்ற நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இன்று அதிகாலை முதல் அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்ற நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மீண்டும் திரும்பிச் சென்றனர்.

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தேசிய வைத்தியசாலையின் பல பிரிவுகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு செயற்பட்டதுடன், புற்றுநோய் வைத்திசாலையில் சிகிச்சைகள் இடம்பெற்றன.

ஓய்வூதியக் கொடுப்பனவு குறைப்பு, சுகாதார காப்புறுதி மற்றும் புகையிலை நிறுவனங்களில் இருந்து புகையிலைத் தடுப்பிற்கு பணம் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட 9 விடயங்களை அடிப்படையாக வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், தீர்வுகள் கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்