சிங்கள மொழியில் கூறிய விடயங்களை அரைகுறையாக விளங்கிக்கொண்டார் சிவாஜிலிங்கம்: மனோ

சிங்கள மொழியில் கூறிய விடயங்களை அரைகுறையாக விளங்கிக்கொண்டார் சிவாஜிலிங்கம்: மனோ

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2016 | 8:51 pm

உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என தாம் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று (28) தெரிவித்த கருத்து குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

புலிகள் இன்று ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தினால் அவர்களது பெயர்களை குறிப்பிடாமல் தமிழ் மக்கள் நினைவஞ்சலிகளை நடத்துவதில் சட்டப்பிரச்சினை இல்லை என்றும் எதிர்காலத்தில் அந்தத் தடை நீக்கப்படுமாக இருந்தால் அப்போது ஜே.வி.பியைப் போன்று புலிகளின் பெயரிலேயே நிகழ்வுகளை தமிழ் மக்கள் நடத்தலாம் என்றே தான் கூறியதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்.கே. சிவாஜிலிங்கம் தான் சிங்கள மொழியில் கூறிய விடயங்களை அரைகுறையாக விளங்கிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை தன்னிச்சையாக எப்போதும் மீறி வருவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, தமிழ் தேசியவாதிகள் குருநாகலுக்கு வந்துவிட்டார்கள் என்று மேடையில் கூறும் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்