கார்த்திகை வீரர்கள் தினத்தைக் கொண்டாட முடியுமானால் மாவீரர் தினம் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

கார்த்திகை வீரர்கள் தினத்தைக் கொண்டாட முடியுமானால் மாவீரர் தினம் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

எழுத்தாளர் Bella Dalima

26 Nov, 2016 | 10:39 pm

ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண் குகவரதன், கார்த்திகை வீரர்கள் தினத்தைக் கொண்டாட முடியுமாயின் மாவீரர் தினம் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறதென கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்தினருக்கும் JVP யினருக்கும் உள்ள உரிமை, போராளிகளுக்கும் வழங்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக இன்றைய வீரகேசரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் மரணமடைந்த படையினருக்காக வடக்கு, கிழக்கில் நினைவுத்தூபிகள் நிறுவப்பட்டு, நாடு முழுவதும் அவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படுவதாக சண் குகவரதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, கிளர்ச்சியில் ஈடுபட்டு மரணித்த JVP யினர் கார்த்திகை வீரர்கள் தினத்தில் தீபமேற்றி நினைவுகூரப்படுவதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வீரகேசரி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராளிகளும் தமிழ் மக்களும் யுத்தத்தில் மரணித்ததை அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தென் பகுதி மக்கள் மத்தியில் இதற்காக பிழையான அர்த்தம் கற்பிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளும், தமிழ் மக்களும் இலங்கை பிரஜைகள் என தெரிவித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன், அவர்களை நினைவுகூர்வதற்கு தடை விதிக்கப்படுகின்றமை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளைப் பாதிக்கும் என கூறியுள்ளார்.

போராளிகள், தமிழர்கள் என பிரிப்பதால் அவர்கள் இலங்கையர்கள் அல்ல என்ற தோற்றப்பாட்டையே மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கம் தேவையெனில் போராளிகளும் தமிழர்களும் இலங்கையர்கள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்