வாகனங்களுக்கான அபராதம், இணைய வரி தொடர்பில் ரவி கருணாநாயக்க தெளிவூட்டல்

வாகனங்களுக்கான அபராதம், இணைய வரி தொடர்பில் ரவி கருணாநாயக்க தெளிவூட்டல்

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 7:09 pm

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இங்கு அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

கேள்வி: 20 ரூபா வரையறைக்குள்ளேயே வாகனங்களுக்கான அபராதம் தற்போதுள்ளது. அதனை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

ரவி கருணாநாயக்‍க: அதிகரிக்க வேண்டுமா? குறைத்தல் மற்றும் அதிகரித்தல் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து போக்குவரத்து அமைச்சு திருத்தத்தை மேற்கொள்ளும்.

கேள்வி: இடது பக்கமாக முன்னோக்கி செல்வதற்காக 25 ஆயிரம் அபராதம் விதிப்பது நியாயமானதா?

ரவி கருணாநாயக்‍க: போக்குவரத்து அமைச்சரே இதனைக் கொண்டுவந்தார். நாளொன்றுக்கு விபத்தினால் 7, 8 பேர் உயிரிழப்பதாகவும் வருடாந்தம் 48 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாகவும் அமைச்சர் என்னிடம் கூறினார். அதனை நிறுத்துவதற்கு நாம் செயற்படவேண்டும் எனவும் கூறினார். நாளொன்றிற்கு 7, 8 பேர் உயிரிழப்பார்கள் எனின் அதனைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேள்வி: இந்த அபராதத்தின் ஊடாக எவ்வளவு நிதியை எதிர்பார்க்கிறீர்கள்?

ரவி கருணாநாயக்‍க: எமக்கு அபராதம் முக்கியமில்லை. எமது வருமானத்தில் நாம் அதை சேர்க்கப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு தொடர்பிலும் இதன்போது அமைச்சர் தெளிவூட்டினார்.

[quote]2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தேவையற்ற செலவீனங்கள் காரணமாக 2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டை நாம் குறைத்துள்ளோம். ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தனர். தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் ஜனாதிபதிக்கு அல்லது எமக்கு முன்வைக்க முடியும் என ஜனாதிபதி கூறியிருந்தார். பிரதமருடன் கலந்துரையாடி சில விடயங்களை முன்னுரிமையின் அடிப்படையில் நாம் பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் கூறியிருந்தார்.[/quote]

கேள்வி: இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இணையத்திற்கான வரியை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன?

ரவி கருணாநாயக்‍க: பெரும்பாலானவர்கள் டேட்டா பாவனைக்கு மாறுவதாக டெலிகொம் நிறுவனம் எமக்கு கூறியிருந்தது. அவ்வாறெனில் வருமானம் துரிதமாகக் குறைவடையும். அந்த மாற்றத்தை சமப்படுத்துவதற்காக ஏனைய நாடுகளில் காணப்படும் விடயத்தையே நாம் முன்னெடுக்கின்றோம்.

கேள்வி: சாதாரணமாக 100 ரூபா பெறுமதியான டேட்டாவிற்கு 50 ரூபா வரி செலுத்தவேண்டியுள்ளது.

ரவி கருணாநாயக்‍க: முன்னர் எவ்வளவு அறவிடப்பட்டது? 48 ரூபா காணப்பட்டது. அது தற்போது 50 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சிறிய அதிகரிப்பு தொடர்பிலேயே நீங்கள் பேசுகிறீர்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்