யாழ். தீவகப் பகுதியில் த.தே.கூ உறுப்பினர்கள் மீது தாக்குதல்: முதலாவது சாட்சியம் பதிவு

யாழ். தீவகப் பகுதியில் த.தே.கூ உறுப்பினர்கள் மீது தாக்குதல்: முதலாவது சாட்சியம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 9:27 pm

யாழ். தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முதலாவது சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர்.

நான்கு குற்றவாளிகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத 50 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

47 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் 40 சாட்சியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சம்பவத்தின் 18 ஆவது சாட்சியாளரான வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் முதலாவதாக சாட்சியம் அளித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று முதலாவதாகப் பயணித்த வாகனம் தன்னுடையது எனவும் அதில் பயணித்த இருவரே கொலை செய்யப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் சாட்சியம் அளித்துள்ளார்.

மேலும், சம்பத்துடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேகநபர்களும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர், அவர்களில் முதலாவது சந்தேகநபரான நெப்போலியனின் முகவரியை நீதிமன்றத்தில் சமர்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ள இரண்டு பேரையும் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதனராஜிற்கு ஓய்வூதியம் வழங்கப்படுமாயின் அதனை உடனடியாக நிறுத்துமாறு ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், பிணை வழங்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக எவ்வாறு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர் என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள பணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, பின்னர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்