ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை: சாட்சியங்கள் அழிக்கப்பட்டமையே சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமைக்கு காரணம்

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை: சாட்சியங்கள் அழிக்கப்பட்டமையே சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமைக்கு காரணம்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 9:27 pm

கடந்த அரசாங்க காலப்பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கொலை, ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டமை மற்றும் சாட்சியங்கள் அழிவடைந்தமை தொடர்பில் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, இவ்விடயம் குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, அமைச்சர் சாகல ரத்நாயக்க பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பட்டியலில் 13 பேர் உள்ளனர். சாதவன் திலகேசன், செல்வராஜா ரஜிவர்மன், பி.தேவகுமாரன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சுபாஷ் சந்திரபோஸ், பஸ்தியன் ஜோர்ஜ், சக்திதாஸ் சுரேஸ், சிவகாமி சிவராஜா, மொஹமட் ரஸ்மி, லசந்த விக்ரமதுங்க, சம்பத் லக்மால் டி சில்வா, சாம்பசிவம் பாஸ்கரன், சின்னத்தம்பி சிவமகாராஜா அதேபோல் காணமற்போன ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார், பிரகீத் ரஞ்சன் பண்டார எக்னலிகொட, தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் 87 பேரின் பெயர் பட்டியல் உள்ளது. கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 20. நிறுவனங்கள் 5. லங்கா ஈ நியூஸ் ஒரு தடவை, சிரச நிறுவனம் இரு தடவைகள், டெய்லி மிரர் பத்திரிகை ஒரு தடவை, சியத்த ஊடக நிறுவனம். தற்போது சில வழக்குகளின் தகவல்கள் மற்றும் சாட்சியங்களை மீள ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன.[/quote]

என தெரிவித்தார்.

இதேவேளை, சில தாக்குதல் சம்பவங்களுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தார்கள், அவர்களுக்கு தண்டனை வழங்காவிடின் எதிர்காலத்தில் எல்லா அரசாங்கங்களும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வரென பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சாட்சியங்கள் அழிக்கப்பட்டமையே தண்டனை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணம் என சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், சாட்சியங்களை அழித்தவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ளதாகவும், தொடர்புள்ள அதிகாரிகள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சில குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தியே சட்ட ஆலோசனை வழங்கப்படுவதாகவும் எக்னெலிகொட காணாமற்போன வழக்கிலும் குற்றவாளிகளுக்கு சட்ட ஆலோசனைக்கு அரசாங்கத்தின் நிதியே வழங்கப்படுவதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்