வடக்கு, கிழக்கில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருக்கு த.தே.கூ மகஜர்

வடக்கு, கிழக்கில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருக்கு த.தே.கூ மகஜர்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 10:03 pm

வடக்கு, கிழக்கில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளனர்.

மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீட்டுத் தேவையானது அவசரமாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய பிரச்சினையாகக் காணப்படுவதாக அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சினூடாக 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது.

தலா 2.1 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படும் பொருத்து வீட்டுத் திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே நிராகரித்ததாகவும் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை, நிரந்தரமற்ற கட்டுமானம், அதிக செலவு உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் பொருத்து வீட்டுத் திட்டத்தை நிராகரித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும், மக்களுக்கு வீட்டுத் தேவை அதிகமாகக் காணப்பட்டதால் குறைந்த செலவில் நிர்மாணிக்கப்படும் வீடுகளைக் கோரியிருந்தனர்.

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு அறிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மீள்குடியேற்ற அமைச்சருக்கு தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கும் சிறந்த பதில் கிடைக்கவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பு அனுப்பியுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு மாறாக மக்கள் பாரம்பரியமாக நிர்மாணித்த செங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கு வழிவகைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்