அரசியல் யாப்பு பேரவை கூடியது: உபகுழுக்களின் 6 அறிக்கைகளை பிரதமர் சமர்ப்பித்தார்

அரசியல் யாப்பு பேரவை கூடியது: உபகுழுக்களின் 6 அறிக்கைகளை பிரதமர் சமர்ப்பித்தார்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 4:05 pm

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியல் யாப்பு பேரவை இன்று காலை பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமது குழு இதுவரை 40 சந்தர்ப்பங்களில் கூடியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு 5 வருடங்களுக்கான ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதன் அவசியம் தொடர்பில் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமைக்கு செல்லும் பட்சத்தில், பாராளுமன்றத்தின் ஸ்திரதன்மையைப் பேணுவது மிகவும் அவசியம் எனவும் அது தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்படுதல் அவசியம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் 14 காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பொன்று உருவாகும் பட்சத்தில் அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவ்வாறில்லாமல், பாராளுமன்றத்தின் அனுமதி மாத்திரம் இதற்குப் போதாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையின் பிரகாரம், பெரும்பான்மையான சகோதர இனத்தவர்களின் ஆதரவும் புதிய அரசியலமைப்பிற்குக் கிடைக்க வேண்டும் என கூறினார்.

இதேவேளை, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் இன்று ஆரம்பமாகியது.

இதன்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் உரிய வகையில் செயற்படுவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தினார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதித் தொகையை 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்