வரவு செலவுத் திட்டம் 2017: வரித்திருத்தம், சலுகைகள் தொடர்பிலான கண்ணோட்டம்

வரவு செலவுத் திட்டம் 2017: வரித்திருத்தம், சலுகைகள் தொடர்பிலான கண்ணோட்டம்

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 10:41 pm

பொருளாதார இலக்குகளை அடையும் நோக்கில், இணக்க அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித்திருத்தங்கள் தொடர்பிலான ஓர் கண்ணோட்டம்

* எவரேனும் வழக்குத் தாக்கல் செய்யும் போது, வழக்குத் தாக்கல் செய்வதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

* வீதி சட்டங்களை மீறுவோருக்கான குறைந்தபட்ச அபராதம் 2500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

* வீசா கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* மொழி மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளன.

* தேசிய வரி பேரவை ஸதாபிக்கப்படவுள்ளது

* வரி செலுத்துவோரை ஊக்கப்படுத்துவதற்காக சலுகைகள் வழங்கப்படவுள்ளன

* கப்பல் மற்றும் விமானக் கட்டணங்களை 50 டொலர் வரை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* Easy Cash உள்ளிட்ட நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் 10 ஆயிரம் ரூபாவிற்கு 5 ரூபா என்ற அடிப்படையில் புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

* தொலைத்தொடர்புக் கட்டணமும் 2.5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

* கையடக்கத் தொலைபேசிகளில் சிம் கார்ட் ஒன்றை செயற்படுத்தும் போது 200 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

* மதுபானம், புகையிலை மற்றும் சூதாட்டத்திற்கான 40 வீத வரியைத் தொடர்ந்தும் பேணிச்செல்வது எனவும் வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

* வருமான வரியிலும் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

* அதிகபட்ச வரி விகிதாசாரம் 40 வீதம் என்பதுடன், வரி விடுவிப்பு எல்லையைக் கடந்த ஒவ்வொரு மட்டத்திற்காகவும் தலா 6 இலட்சம் ரூபா வீதம், 4 தொடக்கம் 24 வீத வரி அறவிடப்படவுள்ளது.

* வட்டி வருமானத்திற்கு அமைய, அறவிடப்படுகின்ற வட்டியும் 5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

* 60 ஆயிரம் ரூபாவிற்குக் குறைந்த வட்டி வருமானம் கிடைக்கும் சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளது.

* சிரேஷ்ட பிரஜைகளின் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரையான வட்டி வருமானத்தை, வருமான வரியில் இருந்து விடுவிக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

* வருமானம் ஈட்டும் போது அறவிடப்படுகின்ற வரியும் திருத்தப்பட்டுள்ளதுடன், மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வரி எல்லையை விதிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

* இரண்டாவது சேவை வருமானம் 50 ஆயிரம் ரூபா வரை கிடைக்கும் போது 10 வீத வரியும், 50 ஆயிரம் ரூபாவிற்கு மேல் கிடைக்கும் போது 20 வீதமும் செலுத்த வேண்டும் என வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரச ஊழியர்களின் வரி அவர்களது சம்பளத்தில் இருந்து குறைக்கப்பட வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* வாகனங்கள் தொடர்பிலும் சில திருத்தங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 100 கிலோ வோட்டை விடக்குறைந்த, எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

* லொறி மற்றும் 5 தொன்களை விடக்கூடிய குளிர்சாதன வசதியுடைய ட்ரக்களை இறக்குமதி செய்வதற்கான கால எல்லை 10 வருடங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

* கார்களுக்கான எயார் பேக், ABS மற்றும் ஆசனப் பட்டிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

* வாகன உரிமைக் கட்டணம் சுங்கப்பிரிவில் இருந்து, வாகனங்கள் விடுவிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்திலேயே அறவிடப்படவுள்ளது.

* 5 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்யும் போது வரிச்சலுகையை வழங்கவும் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

* வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக 10 ஆயிரம் ரூபாவும் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளது.

* உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவசமாக டப்கள் (TAB) வழங்கப்படவுள்ளன.

* ஒரு பாடசாலைக்கு 50 கணனிகள் வீதம் அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

* விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 150 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை அனைத்து பிள்ளைகளுக்கும் சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

* பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதி கிடைக்காத மாணவர்கள், இசெட் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரிக்கும் பட்டப்படிப்பு நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு 8 இலட்சம் ரூபா மானியக் கடன் வழங்கப்படவுள்ளது.

* பிரிவெனாக்களில் கல்வி பயிலும், பிக்கு மாணவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

* விவசாயிகளுக்காகவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

* அரசாங்கம் பயன்படுத்தாத காணிகளை விவசாய செய்கைகளுக்காகப் பயன்படுத்துவது மற்றும் கமநல கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்துதல் என்பன இதில் முக்கியமானவையாகும்.

* 15 ஆயிரம் பசுக்களை இறக்குமதி செய்து, ஒரு பண்ணையாளருக்கு 10 என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* கோழிப்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிகபட்ச சில்லறை விலையாக 420 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

* பண்ணைகளுக்காக சோளம் இறக்குமதி செய்யவும், மானியம் வழங்கப்படவுள்ளது.

* உள்நாட்டுக் கலைஞர்களுக்கு லக்சல நிலுவைப் பணத்தை செலுத்துவது, பண்டித் அமரதேவ இசை ஆசிரமத்திற்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் என்பனவும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன

* ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்றை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து அரச மற்றும் தனியார் சேமலாப நிதி கணக்குகளை ஒருங்கிணைத்து, ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
* முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களைக் கண்காணிப்பதற்காக நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

* தொலைத்தொடர்பு கோபுரங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ், பொதுவான பயன்பாட்டு வசதியாக நடத்திச் செல்லவும் வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

* போதைப்பொருள் ஒழிப்பிற்காக பொலிஸாருக்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புகைத்தல் ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக்கு 500 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குமாறு, சிகரட் உற்பத்தியாளர்களுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

* நேரடி வரி வருமானத்தை 28 வீதத்தில் இருந்து 40 வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

* மறைமுக வரியை 80 வீதத்தில் இருந்து 40 வீதமாக குறைப்பதற்கும், அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக யோசனை முன்வைத்துள்ளது.

* வருமான வரி விகிதாசாரத்தை 14 வீதம், 28 வீதம், 40 வீதம் என மூன்று கட்டங்களாக சீரமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள், பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி, வங்கி, கல்வி, ஆகிய துறைகள் தொடர்ந்தும் 14 வீதத்திற்குக் குறைந்த வரி வீதத்தில் பேணிச்செல்லப்படவுள்ளன.

* நிதியம், ஆதாய பங்கு, முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் மீதான வரி விகிதத்தை 10 வீதத்தில் இருந்து 14 வீதம் வரை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

* யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மீன்பிடித்துறையின் மேம்பாட்டிற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் 1000 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் சிகிச்சைப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

* வட மாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில், முதலீடு மேற்கொள்வோருக்கு விசேட வரிச் சலுகைகளை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* தெற்கு அதிவேக வீதியை பதுளை வரை விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* திருகோணமலையில் குடிநீர்த் திட்டத்தை விருத்தி செய்வதற்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

* பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்காக 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைகள் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான காணிகளை அரசாங்கம் இலவசமாக பெற்றுக் கொடுக்கும் என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வீடமைப்புகளைத் துரிதப்படுத்துவதற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக 180 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்