வறுமையின் பிடியிலிருந்து விடுபட சவுதி சென்றவர் சடலமாகத் திரும்பிய அவலம்

வறுமையின் பிடியிலிருந்து விடுபட சவுதி சென்றவர் சடலமாகத் திரும்பிய அவலம்

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 9:07 pm

வறுமையின் பிடியில் இருந்து மீள வெளிநாட்டுத் தொழிலே சிறந்தது என சிலர் நினைக்கின்றனர்.

ஆனால், அந்த நம்பிக்கை பலரை ஏமாற்றுவதுடன் இன்னும் சிலரின் உயிரையே காவுகொள்வதாய் அமைந்துவிடுகின்றது.

ஹட்டன் – டிக்கோயா, வீரட் தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ராயப்பன் ஒகஸ்டின்,
தனது குடும்பப் பொருளாதார சுமை காரணமாக சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றுள்ளார்.

2014 ஆம் அண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சவுதிக்கு சென்ற அவருக்கு, சவுதியில் வீடொன்றில் சாரதியாகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், ஒகஸ்டின் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அவரது மனைவிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி தொலைபேசி அழைப்பின் மூலம் அறிவிக்கப்பட்டது.

என்றாலும் உயிரிழப்பதற்கு முதல் நாள் தமது கணவர் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவரது மரணம் தமக்கு சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஒகஸ்டினின் மனைவி தெரிவித்தார்.

உயிரிழந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரே சடலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டமை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்பு அமைச்சிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தகவல் வழங்குவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாடுகளில் மரணம் ஏற்படுமாயின் அந்த நாட்டுக்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்ட பின்னரே சடலம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ராயப்பன் ஒகஸ்டினின் மரணம் தொடர்பில் ஆராய்ந்து பதில் அளிப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்