சிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி: வரலாற்றில் பதிவானார் ரங்கன ஹேரத்

சிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி: வரலாற்றில் பதிவானார் ரங்கன ஹேரத்

சிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி: வரலாற்றில் பதிவானார் ரங்கன ஹேரத்

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 9:18 pm

சிம்பாப்வேவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை 257 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

இதேவேளை, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸூக்குப் பின்னர் 350 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கடந்த இலங்கையராக ரங்கன ஹேரத் வரலாற்றில் பதிவானார்.

ஹராரேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஐந்தாம் நாளான இன்று 7 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களுடன் சிம்பாப்வே இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

அதன்படி, சிம்பாப்வே வெற்றிபெற மேலும் 311 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், இலங்கை அணி வெற்றியீட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தது.

3 மணித்தியாலங்கள் களத்திலிருந்து தோல்வியைத் தவிர்க்கக் கடுமையாகப் போராடிய கிரெக் ஏர்வின் இன்று 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இன்று 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், சிம்பாப்வே அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் 53 ஓட்டங்களுக்கு இழந்தது.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 23 ஓவர்களில் 63 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் 350 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கடந்த மூன்றாவது இலங்கையராகவும் ரங்கன ஹேரத் பதிவானார்.

அத்துடன், டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்ட முதல் தொடரிலேயே வெற்றியை ஈட்டிக்கொடுத்த தலைவர் என்ற சிறப்பையும் ஹேரத் பெற்றார்.

இதற்கமைய, 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 எனும் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இது இலங்கை தொடர்ச்சியாக ஈட்டிய ஐந்தாவது டெஸ்ட் வெற்றியாகும்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை தன்வசப்படுத்தியதும் நினைவுகூரத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்